Wednesday, 16 July 2014

நகம் கடித்தால் அப்பா அம்மாவிற்கு ஆகாது என்பது உண்மையா ?

நகம் கடிக்கும் போது நகத்திலுள்ள அழுக்கு, கிருமிகள் வாயின் வழியாக உடலுக்குள் செல்லும். அதனால் நோய்கள் ஏற்படும். துரும்பை கிள்ளினாலும் நகத்தில் அழுக்கு சேரும் அந்த நகத்தை கடிக்கும் போது அது வயிற்றுக்குள் போகும்.

நமக்கு உடம்பு சரியில்லாம போச்சுன்னா நம்மோட சேர்ந்து நம்மைப் பெத்தவங்களுக்கும் சிரமம் அதான் அப்படி சொல்லியிருக்காங்க.

எல்லாத்தையும் இவ்வளவு விளக்கமா சொன்னா கேட்போமா? ஆனா அப்பா அம்மா மேல எல்லா பிள்ளைகளுக்கும் பாசம் இருக்கும். அதான் அவங்களுக்கு ஆகாதுன்னு சொன்னா பிள்ளைங்க அந்த செயலைச் செய்ய யோசிக்கும். நம்ப முன்னோர்கள் ரொம்ப விவரமானவங்க.

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்பது சரியான பழமொழியா?

"ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்" இதனை, 'ஆற்று நீரில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும்' என்று இப் பழமொழிக்குப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'அகத்தில்' என்னும் சொல்தான் 'ஆத்துல' என்று மருவியதாகப் புரிந்துகொண்டு 'அகத்துக்கே அதாவது வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்யவேண்டும்' என்று பொருள் கூறுகின்றனர்.

மேற்காணும் இரண்டு கருத்துக்களுமே தவறானவை. ஏனென்றால் இவை இரண்டுமே அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை உணர்த்துகின்றன. 

ஆற்றுநீரில் எதைப் போடவேண்டும்? ஏன் போடவேண்டும்?. கழிவுப் பொருட்களையா?. ஆற்றுநீரில் கழிவுப் பொருட்களைப் போட்டால் நீரின் தூய்மை கெடுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டுவிடும். அப்படியே போட்டாலும் அளந்துபோடச் சொன்னால் மிச்சத்தை எங்கே போடுவதாம்?. அதுமட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஆறு ஓடுவதில்லை. ஆறில்லாத ஊர்களில் வசிப்பவர்கள் கழிவுகளை எங்கே போடுவார்கள்?. எனவே இப் பழமொழியானது கழிவுகளை ஆற்றில் போட்டு ஒழிப்பதற்காகக் கூறப்பட்டதாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள்கூறுவது ஏற்புடையதல்ல. 

ஏனென்றால் போடுதல் என்ற சொல்லிற்கு செலவுசெய்தல் என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை. இல்லாத பொருளை வருவித்துக் கூறுவதால் இக் கருத்துப் பொருந்தாத ஒன்றாகும். அன்றியும் பழமொழிகள் யாவும் அனுபவம் நிறைந்த சான்றோர்களால் இளைய தலைமுறையினரின் நல்வாழ்விற்காக உருவாக்கப் பட்டவை என்று நாம் அறிவோம்.

எனவே இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை அச் சான்றோர்கள் கூறி இருக்க முடியாது என்று தெளியலாம். இப் பழமொழியின் தவறான கருத்துக்களுக்குக் காரணம் இப் பழமொழியில் உள்ள தூயதமிழ்ச் சொற்கள் கொச்சைவழக்கில் திரிந்ததும் ஒருசில எழுத்துப் பிழைகளுமே. இனி அவற்றைப் பார்க்கலாம்.

இப் பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.
மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக் கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும். 

வீட்டு நுழைவாயில் நெலவு மேலே காலை வைக்கக்கூடாது என்பது ஏன்?

வீட்டுல பெரியவங்க எதுக்கெடுத்தாலும் அத பண்ணாத இத பண்ணாதனு சொல்லுவாங்க.. ஆனா அதுக்கு உண்மையாலுமே அறிவியல் ரீதியா காரணம் இருக்கும். நம்ம மக்கள் கேக்கமாட்டாங்கனு அதுக்கு ஒரு கதைசொல்லி வெச்சுருபாங்க . 

அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் நெலவு மேல கால் வைக்க கூடாதுன்னு சொல்றதும் .

அந்த காலத்து வீடுகளை பாத்தீங்கனா நுழைவாசல் ரொம்ப சின்னதா இருக்கும். அப்போ நெலவுலே கால வெச்சு உள்ளே போனா தலை  இடிக்கும். 

அதுக்காக தான் நெலவு வெக்கும் போது கொஞ்சம் காசு போட்டு கட்டி லட்சுமி சாமி'னு சொல்லி வெச்சிருக்காங்க . அதனால  நெலவுலே கால தாண்டி வெச்சு உள்ளே போகா ஆரம்பிச்சாங்க. அதுவே இப்போ வழக்கமாகி போச்சு. இப்போ எவ்வளவோ முன்னேறி சூப்பரா பெரிய வாசல் வெச்சாலும் நாம நெலவு தாண்டி பொறோம், நெலுவு மேல நிக்கறது இல்ல.

Saturday, 12 July 2014

முன்னோர் அறிவுரையை கேட்கவில்லையே: உணர்ந்தது ஜப்பான்

இன்றைய யுகத்தில், விஞ்ஞான வளர்ச்சியை நாம் பெருமளவில் நம்பினாலும், முன்னோர் அறிவுரைக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், நமக்கு பேரிழப்புகள் ஏற்படக்கூடும் என்பதற்கு, சமீபத்திய உதாரணம் ஜப்பான்.

ஆம். உலகில் முதியவர்கள் அதிகம் உள்ள நாடு ஜப்பான். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி ஆகியவற்றால், நாட்டின் வடகிழக்குப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதுவரை 12 ஆயிரத்து 500 பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அகதிகளாக மாறியுள்ளனர். நாட்டின் வடகிழக்கில் உள்ளது மியாகோ நகரம். இதை சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில், பல நூற்றாண்டுகளாக, சுனாமி தாக்குதல் ஏற்படுவது வழக்கம்.

இது குறித்து எதிர்கால மக்களை எச்சரிக்கும் நோக்கில், பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அங்குள்ள அனேயாசி கடற்கரையில் கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. 

அதன்படி நடக்காதது எவ்வளவு பெரிய தவறு என அப்பகுதி மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு உயரங்களில், வடிவங்களில் இருக்கும் இந்த கல்வெட்டுகளில், "இங்கு சுனாமி பாதிப்பு உண்டு, நிலநடுக்கம் வந்தால், சுனாமியும் வரும். எச்சரிக்கையாக இரு' என்றும், "உயர்ந்த பகுதியில் வசிப்பதே, அமைதியான வாழ்வுக்கு உகந்தது, கல்வெட்டு அமைந்துள்ள இடத்தை தாண்டி, குடியிருப்பை ஏற்படுத்தினால் பேராபத்து நேரிடும்' என்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. 

அதுபோல், எந்தெந்த பகுதியில் சுனாமி தாக்கக் கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், எந்த பகுதியில் வசித்தால், பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி குறிப்பிடவில்லை.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுவன் யூது கிம்யூரா கூறுகையில், "இந்த கல்வெட்டுகள் பற்றி நாங்கள் பாடங்களில் படித்துள்ளோம். 

இவை 600 ஆண்டுகள் பழமையானவை. எங்கள் பகுதி சிறுவர்கள் அனைவருக்கும் இது பற்றி தெரியும்' என்றான். அதே பகுதியில் வசிக்கும் ஐசாமு என்பவர் கூறும்போது, "கடந்த 1896ம் ஆண்டு, பெரும் சுனாமி தாக்கியதை தொடர்ந்து, எங்கள் முன்னோர், மேட்டுப் பகுதியில் குடியேறினர். நாங்களும் அவர்கள் வழியையே பின்பற்றுகிறோம். என்றாலும், கல்வெட்டில் கூறியுள்ளதையும் மீறி, இங்குள்ள சிகெய் கடற்பகுதியில் ஏராளமான பள்ளி மற்றும் குடியிருப்பு கட்டடங்கள் நிறுவப்பட்டன. 

அனைத்தும் தற்போது தரைமட்டமாகி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தான் மிச்சம். கல்வெட்டு வாசகங்கள் குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் மீண்டும் புதுப்புது கட்டடங்கள் இப்பகுதியில் நிறுவப்படும்' என்றார்.

நலன்களை அள்ளி அள்ளி வழங்கும் நாவல் பழம்...!!!

நோயின்றி நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான பலத்தைத் தருவது காய்கறி - பழங்கள். காய், கனிகளை மட்டுமே உண்டு வாழ்ந்த சித்தர்களும், நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை வளம் செரிந்தது. நாகரிகத்துக்கு மாறுகிறேன் என்று மனிதன் இயற்கை உணவுகளைத் தவிர்த்து, சமைத்த உணவுக்காக, தினம் தினம் வாய்க்கு கைக்கும் சண்டை போடுவதன் விளைவு பல்வேறு நோய்களுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். 
'ஜூலை முதல்  செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான்.  நம் ஊர்தான் நாவல் பழத்துக்குப் பூர்வீகம்.
நாவல் பழத்தில் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கால்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. வைட்டமின் பி1, பி2, பி6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது'' என்றவர், நாவல் பழத்தின் பலன்களை விவரித்தார்.
'கால்சியம், எலும்புகளுக்கு உறுதியைக் கொடுப்பதுடன், உடலை வலிமையாக்கும். ரத்தத்தைச் சுத்திகரித்து ரத்த விருத்தியடையச் செய்யும். ரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள வைட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.
நாவல் பழத்திலுள்ள 'ஜம்போலினின்’ எனும் 'குளுக்கோசைடு’ உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லாமல் மருந்தாக பத்தியமிருந்து 1 மண்டலத்துக்குச் சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில் கலந்து குடிக்கலாம்.  
இந்தப் பழத்தில் 'குயுமின்’ எனும் 'ஆல்கலாய்டு’ உள்ளது.  இது தோலில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து வயதாவதைத் தள்ளிப்போடும். உடலில் புதிய செல்களைப் புதுப்பிக்கும் திறன்கொண்ட 'ஆன்டி ஆக்சிடன்ட்’ ஆப்பிள், கேரட், மாதுளையைவிட நாவல் பழத்தில் அதிகம். இதனால் தோலில் ஏற்படும் வெண்புள்ளி, அரிப்பு போன்றவற்றைக் குணப்படுத்தும். நாவலை தொடர்ந்து உண்டுவர தோல் பொலிவு கிடைக்கும். வாய் முதல் குடல் வரை ஏற்படுகிற புண்களைக் குணப்படுத்தும். அதிகமாக சிறுநீர் கழிக்கும் பிரச்னை உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் போக்குக் கட்டுக்குள் வரும். பசியைத் தூண்டும்.
நாவல் பழம் குளிர்ச்சியானது என்பதால்  உடல் சூட்டைத் தணிக்கும். கல்லீரல், மண்ணீரலில் ஏற்படும் நோய்களையும், மஞ்சள் காமாலையையும் குணப்படுத்தக் கூடியது. பெண்களுக்கு கர்ப்பப்பை தொடர்பான  சிக்கல், வெள்ளைப்படுதல், மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு ஆகியவற்றையும்  நாவல் பழம் சரியாகும்.
நாவல் பழத்தை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடக்கூடாது என்பார்கள். இது தவறு! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய அற்புத பழம்.  இப்போது நகர்புறங்களில் விதையில்லா 'ஹைப்ரிட் வகை’ நாவல் பழங்கள் அதிகமாக விற்கப்படுகின்றன. இதில் கொஞ்சம்கூட சத்து கிடையாது. நாட்டு நாவல் பழத்தில் மட்டுமே மேற்கூறிய பலன்கள்!'' என்றார்.
நாட்டு நாவலை உண்டு மகிழ்வோம்!

உலகிலேயே அதிக சுற்றுலா பயணிகள் செல்லும் நகரங்கள்...!!!

லண்டன்

உலகிலேயே அதிக சுற்றுலா பயணிகள் வருகை தரும் நகரமாக இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு முதலிடத்தில் இருந்த பேங்காங்கை பின்னுக்கு தள்ளிவிட்டு லண்டன் இந்த மகுடத்தை சூட்டிக்கொண்டுள்ளது. மாஸ்டர்கார்டு குளோபல் சிட்டிஸ் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டில் லண்டனுக்கு 18.69 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ற ஆண்டைவிட நடப்பாண்டில் 3 லட்சம் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

போன வருடம் பாங்காங் முதலிடம்

மாஸ்டர்கார்டு குளோபல் சிட்டிஸ் அமைப்பு, உலகிலேயே அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் 132 இடங்களை பட்டியலிட்டு அதில் முதலிடத்தை லண்டனுக்கு அளித்துள்ளது. கடந்தாண்டு இந்த பட்டியலில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காங் முதலிடம் பிடித்திருந்தது.

கடந்தாண்டை ஒப்பிட்டால் 8 சதவீத வளர்ச்சியை பெற்ற லண்டன், இந்தாண்டு முதலிடத்தை பிடித்துள்ளது.

அதே நேரம் பாங்காங்கிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 11 சதவீதம் குறைந்துள்ளது. தாய்லாந்தில் நிலவும் அரசியல் ஸ்திரமற்றதன்மை இந்த வீழ்ச்சிக்கு காரணம்.

சிங்கப்பூருக்கு 4 ஆம் இடம், துபாய்க்கு 5 ஆம் இடம்

இந்தாண்டு ஆய்வில், லண்டனுக்கு அடுத்த இடத்தை பாங்காங் பிடித்துள்ளது. 15.7 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பாரீஸ், 3ம் இடமும், சிங்கப்பூர் 12.7 மில்லியன் சுற்றுலா பயணிகளுடன் நான்காம் இடமும் பிடித்துள்ளன. துபாய்க்கு 11.95 மில்லியன் சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் இப்பட்டியலில் அது 5வது இடத்தை பெற்றுள்ளது.

இதற்கடுத்தபடியாக நியூயார்க், இஸ்தான்புல், கோலாலம்பூர், ஹாங்காங், சியோல் போன்ற நகரங்கள் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் நகர பட்டியலில் உள்ளன.

தெரிந்து கொள்ளுங்கள்...!!!

முதலலையால் சுமார் 6 மணிநேரம் வரை மூச்சுத் திணறாமல் தண்ணீருக்குள்   இருக்க முடியும்.

கிராம்பு என்பது காயோ, கனியோ அல்ல, ஒரு மரத்தின் மொட்டு.

எறும்பு 100 நாட்கள் வரை கூட தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழும், தலை துண்டிக்கப்பட்டாலும் 20 நாட்கள் உயிருடன் இருக்கும்.

புழு, பூச்சிகளிலேயே மிக அதிகமான கால்களைக் கொண்டது மண்புழுதான். இதற்கு, சுமார் 1,200 கால்கள் உள்ளன.

பறவை இனங்களிலேயே பென்குயின் ஒன்றுதான் நீந்துவதற்குத் தன் சிறகுகளைப் பயன்படுத்துகிறது.

கடல் உயிரினங்களில் மோப்ப சக்தி கொண்டது சுறா மீன்.

இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன?

இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?

டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் இந்திய நாணயங்கள் தயாரிக்கப்படுகின்றன. 

எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள், அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். 

அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது என்பதை அறியமுடியும். 

நாணயத்தில் உள்ள ஆண்டுக்குக் கீழே ஒரு புள்ளி இருந்தால் அது டெல்லியிலும், டைமண்ட் வடிவம் இருந்தால் அது மும்பாயிலும், நட்சத்திர வடிவம் இருந்தால் அது ஹைதராபாத்திலும், எந்தக் குறியீடும் இல்லாமல் இருந்தால் அது கொல்கத்தாவிலும் தயாரிக்கப்பட்டது ஆகும். 

சரி, உங்கள் பையில் உள்ள நாணயத்தினை எடுங்கள்; எந்தக் குறி இருக்கிறது என்று பாருங்கள். அது எந்த ஊரில் தயாரானது என்று தெரிந்துவிடும்.

Friday, 4 July 2014

தெரிந்து கொள்ளுங்கள்...!!!

லட்சக்கணக்கான மரங்கள் அணிலால் நடப்படுகின்றன. பழங்களை, விதைகளை அவசரத்தில் புதைத்துவிட்டு பின் மறந்துவிடுவது அவைகளின் வழக்கம். 

பூமியின் சுழலும் வேகம் குறைவதால் இன்னும் மில்லியன் ஆண்டுகளில் லீப் வருடம் இருக்காது என்று கூறப்படுகிறது.

டால்பின்கள் ஒரு கண்ணை திறந்து கொண்டே தூங்கும்.

நத்தைகள் தொடர்ந்து முன்று வருடம் தூங்ககூடும். எறும்புகள் சுத்தமாக தூங்குவதில்லை. 

எறும்புகளை அங்கும் இங்கும் நகர விடாமல் ஒரே இடத்தில இருக்க வைத்தால் அது இறந்து விடும் . 

பறவைகள் "வி" வடிவத்தில் பறப்பது ஏன்?

பறவைகள் கூட்டமாக பறப்பதை கவனித்திருந்தால் அவை ஒரே சீராக வி வடிவத்தில் பறப்பதை காணலாம். சென்னையில் காக்கை மட்டுமே காண முடியும் என்பதால் கொஞ்சம் வெளியில் வந்து செங்கல்பட்டில் சீதோஷண காலங்களில் பார்த்தால், நீண்ட தொலைவிலிருந்து வரும் கொக்கு நாரை போன்ற வெளி நாட்டுப்பறவைகள் இந்த வடிவத்தில் பறப்பதை காணலாம். ஒரு பறவை முன்னணியில் பறந்தும் பின்னால் வரும் பறவைகள் குறிப்பிட்ட இடைவெளியில் வருவதையும் பார்க்கலாம். பொதுவாக இதன் வடிவம் "வி" என இருக்கும். அதன் காரணம் என்ன?

பறவைகள் வி வடிவத்தில் பறப்பதால் அவை அதிக அளவு ஆற்றலை சேமிக்கின்றன. இதனால் அவை வெகு தூரம் அவை தொடர்ந்து பறக்க முடிகிறது. அவை தனியாக பறப்பதினால் பயன்படுத்தப்படும் ஆற்றலைவிட இது போல் வி வடிவத்தில் பறப்பதினால் அவைகளின் ஆற்றலில் 70% வரை சேமிக்கின்றன.

பொதுவாக தனியாக ஒரு பறவை பறக்கும்பொழுது காற்றில் அதன் பின்னிழுக்கும் விசை மிக அதிகமாக இருக்கும். பறவைகள் இதுபோல வி வடிவில் பறப்பதால் அதன் பின்னுழுக்கும் விசை வலுவிழந்து சமமான  மிதக்கும்விசை காரணமாக பறவைகள் தொடர்ந்து வெகுதூரம் இலகுவாக பறக்கின்றன. முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து பறவைகளும் இதன் காரணமாக எளிதாக பறப்பதில்லை.

 படத்தில் உள்ள பறவைகளில் சிவப்பால் வட்டமிடப்பிட்டவை, காற்றிற்கு எதிராக பறக்கையில் அதிகபட்ச உராய்வினால் மிக அதிக ஆற்றலை எடுத்துக்கொள்கின்றன. எனவே மிக விரைவில் சோர்வடைகின்றன. அப்படி சோர்வடையும்போது பின்னால் வருகிற பறவைகள் தலைமை பொறுப்பை எடுத்துக்கொண்டு முன்னே வந்து தொடர்ந்து பறக்கின்றன. சோர்வடைந்த பறவை பின்னே தொடர்ந்து வரும். இப்படியே தொடர்ந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொடர்ந்து பறக்கின்றன. இதன் காரணமாக அனைத்து பறவைகளும் தலைமை பொறுப்பை ஏற்கிற வாய்ப்பு கிடைக்கிறது. மேலும் சோர்வடையும் போது நடுவில் ஓய்வு எடுத்துக்கொள்கின்றன

இது போல பறப்பதால் எந்த பறவையும் அதன் சக பறவையை எந்த நிலையிலும் பார்க்க முடியும். இதனால் மிக நீண்ட தூரம் பறக்கையில் அனைத்துப்பறவையும் சக பறவைகளின் பார்வையில் இருக்கும். தொலைந்து விடுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதனால் அவை தொடர்ந்து கூட்டத்தை பின் தொடர்ந்து கொண்டிருக்கும்.

Thursday, 3 July 2014

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார் என்றால் என்ன ?

ஒரு மனிதன் அடித்தால் தான், ஒருவரிடமிருந்து உண்மையை பெற முடியும்  என்று நம்புகிறார்கள் பலர். பல சந்தர்ப்பங்களில் பெரியவர்கள், இப்பழமொழியை முன்னோடியாகக் கொண்டு குழந்தைகளை துன்புறுத்தவும் செய்கின்றனர் . வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்கக் கூடும். அண்ணன் தம்பி கூட உதவாத பல தருணங்களில் வன்முறை நமக்கு நிச்சயமாக உதவும் என்று தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு, இன்றும் இப்பழமொழிக்கு அவ்வாறே பலர் விளக்கம் கொடுக்கின்றனர்.

உண்மை அதுவல்ல. அடி என்பது இறைவனின் திருவடி. துன்பம் ஏற்படும் போது இறைவனே கதி என்று அவன் திருவடியை நம்பினால் , அண்ணன், தம்பி, உற்றார், உறவினர் எவர் உதவியையும் எதிர் நோக்கத் தேவை இருக்காது என்பதை உணர்த்தவே "அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்" என்று கூறியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து என்றால் என்ன ?

பழமொழிகள் என்பவை  நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்கு விட்டுச் சென்ற அனுபவக் கூற்றாகும். பழங்காலத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அனுபவ முதிர்ச்சியினால் தோன்றிய இந்த பழமொழிகள், ஒரு சமுதாயத்தில் நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து, பிறகு காலம் மாற மாற, அதன் அர்த்தங்களும் திரிந்து மருவி, வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்ளப் படுகிறது.

 "பந்திக்கு முந்து" என்றால் சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும். கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது என்பதனால், பந்திக்கு முந்தவேண்டும் எனது கொள்கின்றனர் இன்றைய கால மக்கள் .

"படைக்குப் பிந்து" என்றால் சண்டை சச்சரவுகள் ஏற்படும் பொழுது மற்றவர்களை முன் நிறுத்திவிட்டு, நாம் பிந்திச் சென்று விடவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா ? ஆனால் இதுவே உண்மையல்ல.

உண்மையில் அக்காலத்தில் காலாட்படையின் ஒரு பிரிவுக்கு " பந்திப்படை " என்று பெயர். போர் நடக்கும் காலத்தில் பந்திப்படையை முன்னே செல்ல விட்டுவிட்டு, பயங்கர ஆயுதங்களைக் கொண்ட படைகளை பந்திப்படைக்கு பிந்தி செல்ல வைத்து போரை முறையாக நடத்த வேண்டும் என்பதைக் குறிக்கும் பழமொழி.

 நம் எதிராளியிடம் சண்டையிடும்போதும்கூட அதில் ஒரு ஒழுங்கு முறை இருக்க வேண்டும் என்பதை விளக்கும் மிக அருமையான பழமொழி ஆகும். இப்பழமொழிக்கு வேறு ஒரு விளக்கமும் வழக்கத்தில் உள்ளது.

பந்தியில் சாப்பிடுவதற்கு நம் வலது கை முந்தும். படைக்கு செல்லும் சமயத்தில் நம் வலது கை நாணைப் பின்னோக்கி இழுத்து அம்பை எய்யும். எவ்வளவு தூரம் பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அந்த அளவிற்கு அம்பு வேகமாகச் சென்று எதிரியை தாக்கும் என்பதால் , வலது கை பந்திக்கு முந்தும். படைக்குப் பிந்தும் என்று சொல்கின்றார்கள். இதுவே நாளடைவில் உருமாறி "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்று உருவாகிவிட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

Wednesday, 2 July 2014

உடல் தோற்றத்தில் உள்ள நோயின் அறிகுறிகள் ...!!!

கண்கள் உப்பியிருந்தால்

என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

மருத்துவம் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

மருத்துவம் : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்

என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

மருத்துவம் : எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது

என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

மருத்துவம் : குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்

தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

மருத்துவம் : அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

முகம் வீக்கமாக இருப்பது

என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

மருத்துவம்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

மருத்துவம் : அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

பாதம்

கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

மருத்துவம் : வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

பாதம் மட்டும் மரத்துப் போதல்

என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

மருத்துவம் : பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்

என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

மருத்துவம் : தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

கைகள்

சிவந்த உள்ளங்கை
என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

மருத்துவம் : கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

வெளுத்த நகங்கள்

என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!

ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

மருத்துவம் : இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

விரல் முட்டிகளில் வலி

என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

மருத்துவம் : உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

நகங்களில் குழி விழுதல்

என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

மருத்துவம் : உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

வாய்

ஈறுகளில் இரத்தம் வடிதல்.

என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

மருத்துவம் : தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.

சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்

என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

மருத்துவம் : 'மல்டி_விட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.

என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

மருத்துவம் : நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும். : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.