"ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்" இதனை, 'ஆற்று நீரில் போட்டாலும் அளந்து தான்
போடவேண்டும்' என்று இப் பழமொழிக்குப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலர்
'அகத்தில்' என்னும் சொல்தான் 'ஆத்துல' என்று மருவியதாகப் புரிந்துகொண்டு
'அகத்துக்கே அதாவது வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்யவேண்டும்'
என்று பொருள் கூறுகின்றனர்.
மேற்காணும்
இரண்டு கருத்துக்களுமே தவறானவை. ஏனென்றால் இவை இரண்டுமே அறிவுக்குப்
புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை உணர்த்துகின்றன.
ஆற்றுநீரில் எதைப் போடவேண்டும்? ஏன் போடவேண்டும்?. கழிவுப்
பொருட்களையா?. ஆற்றுநீரில் கழிவுப் பொருட்களைப் போட்டால் நீரின் தூய்மை
கெடுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டுவிடும். அப்படியே போட்டாலும்
அளந்துபோடச் சொன்னால் மிச்சத்தை எங்கே போடுவதாம்?. அதுமட்டுமின்றி எல்லா
ஊர்களிலும் ஆறு ஓடுவதில்லை. ஆறில்லாத ஊர்களில் வசிப்பவர்கள் கழிவுகளை எங்கே
போடுவார்கள்?. எனவே இப் பழமொழியானது கழிவுகளை ஆற்றில் போட்டு
ஒழிப்பதற்காகக் கூறப்பட்டதாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.
அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள்கூறுவது ஏற்புடையதல்ல.
அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள்கூறுவது ஏற்புடையதல்ல.
ஏனென்றால் போடுதல் என்ற சொல்லிற்கு செலவுசெய்தல் என்ற பொருள் எந்த
அகராதியிலும் இல்லை. இல்லாத பொருளை வருவித்துக் கூறுவதால் இக் கருத்துப்
பொருந்தாத ஒன்றாகும். அன்றியும் பழமொழிகள் யாவும் அனுபவம் நிறைந்த
சான்றோர்களால் இளைய தலைமுறையினரின் நல்வாழ்விற்காக உருவாக்கப் பட்டவை என்று
நாம் அறிவோம்.
எனவே இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற
கருத்துக்களை அச் சான்றோர்கள் கூறி இருக்க முடியாது என்று தெளியலாம். இப்
பழமொழியின் தவறான கருத்துக்களுக்குக் காரணம் இப் பழமொழியில் உள்ள
தூயதமிழ்ச் சொற்கள் கொச்சைவழக்கில் திரிந்ததும் ஒருசில எழுத்துப்
பிழைகளுமே. இனி அவற்றைப் பார்க்கலாம்.
இப்
பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம்
'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும்
இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில்
போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப்
பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான
திருத்தங்கள் ஆகும்.
மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு
வண்ணமுமாய் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக்
கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு
அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும்.
0 komentar:
Post a Comment